கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து, தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது அம்மாநில அரசு.
அதனால் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி காவல் துறையிடம் த.வெ.க அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் வந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி கேட்டனர்.
தன்னுடைய நெருங்கிய நண்பரான விஜய்யின் ரோடு ஷோவுக்கு முதல்வர் ரங்கசாமி அனுமதி வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் கைவிரித்துவிட்டதால், விரக்தியடைந்த த.வெ.க டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டது.

அதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, த.வெ.க கூட்டம் நடைபெறும் அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலால் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கலால் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “தமிழகத்தில் குறைந்தது 5 கிலோமீட்டருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அப்படி இருக்கும்போதும் அங்கு பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், 5 மீட்டருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகம். அதனால் அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.