அண்ணாவிடமிருந்தும், எம்.ஜி.ஆரிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. இவர்கள் இருவரையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என யாரும் அழுதுக்கொண்டிருக்கக் கூடாது.
உங்களுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் பிறகு ஏன் கதறுகிறீர்கள். பொலம்புகிறீர்கள். முதலில் மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறைங்க சார். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்திருக்கும் காசு துணை என்றால் எனக்கு இந்த மக்கள் மாஸ் தான் துணை. பெரியாரை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். நம் அரசியல் எதிரி தி.மு.க. கொள்கை எதிரி பா.ஜ.க.” என்றார்.
மேலும், மஞ்சளை மதிப்பை கூட்டி விற்பனை செய்ய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. கரும்பு, நெல் கொள்முதலில் ஊழல். மஞ்சளுக்கு நியாயமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய சிந்திப்பதே இல்லை.
பவானி – நொய்யலாறு – அமராவதி இணைப்பு திட்டத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆறுகளை சுத்தப்படுத்துவோம் எனச் சொன்னார்கள்… ஆனால், ஆற்றுமணலை கொள்ளையடிப்பதை மட்டும் சிறப்பாக செய்வார்கள். மற்ற மாவட்டத்தில் மலை, மணல் காணாமல் போனதுபோல இந்த மாவட்டத்தில் செம்மண்ணும் காணாமல் போகலாம்.
அரசு நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்த வேட்டி சேலைக்கான ஊதியம் கூட போராடிதான் பெறவேண்டியிருக்கிறது. பீக் ஹவர்ஸ் மின்சாரத்துக்கான விலையை கூட்டி நம் பொருளாதாரத்தில் அடிக்கிறார்கள். எல்லா மாவட்டத்திலும் பிரச்னைகள் இருக்கிறது. இதையெல்லாம் தீர்க்க எந்தத் தீர்வையும் கொடுக்காமல் மாடல் அரசு எனப் பெருமை பேசுகிறார். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் எனச் சொல்வதும், ஓசி எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்போம் எனக் கூறினோம். எல்லோரும் குறைந்தபட்சம் டிகிரி முடிக்க வேண்டும் எனக் கூறினோம். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வருமானம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்ட ஒழுங்கு சரியில்லை எனக் கூறினால் இதெல்லாம் ஏற்கெனவே நாங்கள் செய்துவிட்டோம் எனப் பொய்ச் சொல்லி வாயால் வடை சுடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சொன்னதை நானும் இப்போது சொல்கிறேன். தி.மு.க ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூய சக்தி. அண்ணன் செங்கோட்டையன் நம்முடன் வந்து சேர்ந்தது நமக்கு பெரும் பலம். அவர்போல வந்து சேரும் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுப்போம். என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்றியே என சிஎம் சார் பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் நீங்களும், ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் அவரும் முதலில் எங்களின் கேரக்ட்ரை புரிஞ்சிக்கிங்க” என்றார்.
(விஜய்யின் உரை தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யப்படும்)