சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.
அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அடுத்த சில தினங்களில் திமுகவில் இருந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்தார்.
சினிமா ஏரியாவில் இருந்தும் பலர் தங்கள் அபிமான கட்சிகளில் சேர்வது தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கட்சியில் சேர்ந்துதுமே கே ஏ செங்கோட்டையனையும் சந்தித்திருக்கும் ரவியிடம் பேசினோம்.
“‘பெரிய பின்னணி கொண்ட குடும்பம் எங்களோடது. சில வருடங்களாகவே ஏதாவது சர்வீஸ் பண்ணலாம்கிற ஒரு எண்ணம் மனசுக்குள் ஓடிக்கிட்டே இருந்தது. இருக்கிற ரெண்டு பெரிய கட்சியிலயும் சேர விருப்பமில்லை.
விஜய் சார்கூட ‘கத்தி’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னுடைய மகன் கல்யாணத்தை அவர்தான் தலமைமை தாங்கி நடத்தி வச்சார். அவர் அரசியலுக்கு வரப்போறார்ங்கிற பேச்சு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை கவனிச்சிட்டே வந்தேன்.
அவருடைய அரசியல் என்ட்ரியை தமிழகமே வரவேற்கிறதுக்கான சாட்சிதான் கூடுகிற கூட்டம், சமீபகாலத்துல எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இப்படியொரு கூட்டம் கூடி நான் பார்த்ததே இல்லை. அவரைப் பார்க்க இளைஞர்கள், பெண்கள்னு எல்லாரும் திரண்டு வர்றாங்க. இந்தக் கூட்டமெல்லாம் சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே வருதுன்னு யாரும் குறைச்சு எடைபோடக்கூடாது. தமிழக அரசியலையும் சினிமாவையம் பிரிக்கமுடியாது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு இங்க சாதிச்சவங்க பட்டியலை எடுத்துப்பார்த்தாலே சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் இடைப்பட்ட தொடர்பை தெரிஞ்சுக்கலாம். அதே வழியிலதான் விஜய்சாரும் வர்றார்.