TVK Vijay: "ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும்" – விஜய் அறிக்கை

Spread the love

ஈரோட்டில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் மக்கள் நின்று பார்ப்பதற்கான இடம், பார்க்கிங் வசதி, குடிநீருக்கான வசதி எனப் பலவற்றையும் இந்த நிகழ்வில் தவெகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய் அங்கிருந்து நிகழ்வு நடந்த பெருந்துறைப் பகுதிக்கு காலை 11.30 மணிக்கு மேல் வந்தடைந்தார்.

ஈரோடு கூட்டம்: விஜய்
ஈரோடு கூட்டம்: விஜய்

இந்நிலையில், “ஈரோட்டில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது” என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன்.

இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக் காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும்.

ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவேதான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.

ஈரோடு கூட்டம்: விஜய்
ஈரோடு கூட்டம்: விஜய்

அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல.

உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.

அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *