இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்.