கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே மா.செக்களை அறிவிக்காமல் கிடப்பில் போட்டிருந்தனர். இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை அறிவிக்கவிருந்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, “உழைத்தவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டுமெனக் கோரி’ தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்தார்.
அவரை அலுவலகத்துக்கு அரை கிலோமீட்டர் முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். சில நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்தார். அப்போது ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர், ‘நாம் இப்படியே கலைந்து சென்றுவிட்டால் நம்மை அப்படியே கழட்டிவிட்டு விடுவார்கள். அப்படியெனில் உழைத்ததற்கு என்ன மரியாதை மதிப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னையெல்லாம் தளபதிக்குத் தெரியுமா தெரியாதா என்றே தெரியவில்லை. அவர் காரின் முன்பு கூடுவோம். நிச்சயமாக வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பார்?’ எனக் கூறினர்.
இன்னொரு தரப்போ, ‘அப்படி எதாவது செய்து பிரச்னை ஆகினால் நம்மை இத்தோடு ஜீரோ ஆக்கிவிடுவார்கள். கொஞ்சம் பொறுமையாக இருப்போம்’ என்றனர். அஜிதாவும் அந்த மனநிலையில்தான் இருந்தார். காரை மறிக்கும் ஐடியாவை கொடுத்த டீம், ‘நம்ம வேலை பார்த்த ஏரியாவுல இன்னைக்கு இன்னொருத்தருக்கு போஸ்டிங் போட போறாங்க. அது மட்டும் நடந்துருச்சுனா ஊருக்குள்ள நம்ம இனிமே என்ன அரசியல்தான் செய்ய முடியும். டம்மியாக இருப்பதற்கு பிரச்னை ஆனாலும் பரவாயில்லை என தளபதியின் காரை மறிப்போம்’ என அஜிதாவைத் தேற்றி காரை மறிக்க அழைத்து வந்தனர்.