மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக மும்பை மாடல் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, “‘தியாகிகளின் தியாகங்களால் நாம் மும்பையைப் பெற்றோம். ஆனால் நம் கண் முன்னே, அது இரண்டு குஜராத்தி நபர்களால் விழுங்கப்படப் போகிறது.
நாம் நமது தனிப்பட்ட லட்சியங்களுக்கு முன்னுரிமை அளித்து, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், இந்த பிளவை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களில் யாரும் பிரிந்து செல்லக்கூடாது.

ராஜ் தாக்கரே தலைமையிலான எம்.என்.எஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வதற்கு சில சமரசங்கள் தேவைப்பட்டன. ஒரு கூட்டணி அல்லது காரியங்கள் எப்போதும் ஒருவரின் விருப்பப்படி நடப்பதில்லை. மகாராஷ்டிராவுக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் நாங்கள் எம்.என்.எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
ஒரு கூட்டணி அல்லது கூட்டு உருவாகும்போது, எல்லாமே நமது விருப்பப்படி 100% நடப்பதில்லை. அதுபோலவே, அவர்களின் விருப்பப்படியும் 100% நடப்பதில்லை. சில இடங்கள் எங்களுடையவைதான், ஆனால் அவற்றை நாங்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. மராத்தியர்களுக்கு வீரத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடினோம். மும்பைக்காகவும், ஒன்றுபட்ட மகாராஷ்டிரத்திற்காகவும் நடந்த போராட்டத்தில் பாஜகவுக்கோ அல்லது அப்போதைய ஜனசங்கத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
குஜராத் மும்பையை விரும்பியது, அதனால் அவர்கள் போராடினார்கள். இன்றுவரை, பாஜக எங்களைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்தார். மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 65 முதல் 70 வார்டுகளை உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவிற்கு கொடுத்துள்ளார். இதில் 12 முதல் 15 வார்டுகளில் கடந்த தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த கவுன்சிலர்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அல்லது பா.ஜ.கவிற்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த வார்டுகளை ராஜ் தாக்கரே கட்சிக்கு உத்தவ் தாக்கரே கொடுத்துவிட்டார்.