இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற நீட்-யுஜி தோ்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை(ஜூலை 26) வெளியிட்டது.
இதனையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில், 1.10 லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
மேலும், பல் மருத்துவப் படிப்புகளுக்கான 21,000 இடங்களும், ஆயுஷ் மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான இடங்களும் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. இந்த தகவலை தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலர் டாக்டர் பி. ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து அறிய..
அனைத்திந்திய இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள 15 சதவிகித இடங்களும், எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மெர், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.