உத்தரப்பிரதேசத்தில் 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த காதல் கணவனை மனைவி இரண்டு மாதத்தில் கொலை செய்துள்ளார்.
அங்குள்ள பரேலி என்ற இடத்தில் வசிப்பவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துநராக இருக்கிறார். இவருக்கும் ஜிதேந்திர குமார் என்பவருக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம்தான் திருமணம் நடந்தது.
ஜிதேந்திராவும் அரசு நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இருவரும் மாணவர் பருவத்தில் இருந்தே கடந்த 9 ஆண்டுகள் காதலித்து வந்தனர்.
திடீரென ஜிதேந்திரா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜோதியின் குடும்பத்தினர் ஜிதேந்திரா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தனர். ஆனால் அதில் சந்தேகம் ஏற்பட்டதால் ஜிதேந்திர குமார் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் ஜிதேந்திர குமார் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜோதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் அவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் ஜோடித்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம்
இது குறித்து போலீஸார் கூறுகையில், “‘ஜோதியும், ஜிதேந்திராவும் நவம்பர் மாதம்தான் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்தினரும் சேர்ந்துதான் திருமணம் செய்துவைத்தனர். அவர்களுக்குள் ஒரு சில மாதத்தில் பணப் பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.
ஜோதியின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் எடுத்து ஜிதேந்திர குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் பணம் காணாமல் போனது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது.