குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் பிரதான உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் அனைத்து வகையாக சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. அந்த தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அனைத்து தாய்ப்பாலிலும் கதிர்வீச்சை உண்டுபண்ணும் யுரேனியம் கலந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
பல்வேறு ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடும் என்று பல நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் வர்மா கூறுகையில்,”‘ 40 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரியில் அனைத்திலுமே யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 70% குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத உடல்நல கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஆனாலும் ஒட்டுமொத்தமாக யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குக் கீழேதான் இருந்தன. எனவே குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு குறைந்தபட்ச பாதிப்பையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ககாரியா மாவட்டத்தில் சராசரியாக அதிகபட்ச யுரேனிய மாசுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் பாதிப்பால் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு மற்றும் மூளைவளர்ச்சி குறைதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது” என்றார்.
சிறுநீரக கோளாறு அபாயம்
70% குழந்தைகளுக்கு HQ அளவு 1 என்ற அளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதால் ஏற்படக்கூடிய புற்றுநோய் அல்லாத உடல்நல கோளாறு அபாயங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். யுரேனியம் பாதிப்பால் குழந்தைகளுக்கு சிறுநீரக வளர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மனநலத்தில்(குறைந்த IQ மற்றும் நரம்பியல் வளர்ச்சி தாமதம் உட்பட) பாதிப்பு ஏற்படும்.
இருப்பினும், தாய்ப்பாலில் உள்ள யுரேனியத்தின் அளவின் அடிப்படையில் (0-5.25 ug/L), குழந்தையின் ஆரோக்கியத்தில் உண்மையான தாக்கம் குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது. மேலும் தாய்மார்களின் உடம்பிற்குள் செல்லும் பெரும்பாலான யுரேனியம் தாய்ப்பாலில் சேர்ந்துவிடாமல், சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படுகிறது.