US-wanted drug lord shot dead in Mexico: Nationwide riots – அமெரிக்காவால் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை: நாடுமுழுவதும் கலவரம்

Spread the love

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்டிப்பறந்தான். அவனை அரசாங்கமே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.

மெக்சிக்கோவில் இருந்து போதைப்பொருள் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு வந்தது. எல் மென்ச்சோ, மெக்சிக்கோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் பதுங்கி இருந்து தனது கடத்தல் தொழிலை செய்து வந்தான். அதோடு Jalisco New Generation Cartel என்ற ஒரு அமைப்பு மூலம் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த எல் மென்ச்சோவிற்கு எதிராக மெக்சிக்கோ ராணுவம் நேற்று ஜாலிஸ்கோ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

இதில் எல் மென்ச்சோ படுகாயத்துடன் பிடிபட்டான். அவனை ராணுவத்தினர் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து போனான். அவன் ராணுவத்தால் கொல்லப்பட்ட செய்தி பரவியவுடன் நாடு முழுவதும் வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டது.

எல் மென்ச்சோ ஆதரவாளர்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை மறித்து தீவைத்து கொளுத்தி வருகின்றனர். நிலைமை சரியாகும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று ஜாலிஸ்கோ கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளார். 6 மாகாணங்களில் வன்முறை நடந்து வருகிறது.

இது குறித்து மெக்சிக்கோ பாதுகாப்புத்துறை செயலாளர் ஹார்ஃபுச் அளித்த பேட்டியில், “‘மெக்ஸிகோ-குவெரெட்டாரோ நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை கொள்ளைகள், லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்தல், கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகளில் தொடர்புடைய ஒரு முக்கிய CJNG தலைவரான, எல் மென்ச்சோ படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக உளவுத்துறைப் பணி மற்றும் மாநில கூட்டு சோதனைகள் மூலம் இதனை ராணுவம் செய்துள்ளது”என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஹார்ஃபுசை படுகொலை செய்ய எல் மென்ச்சோ ஆதரவாளர்கள் மூன்று முறை முயற்சி செய்தனர். ஆனால் இப்போது நடந்த ராணுவ நடவடிக்கையில் ஹார்ஃபுச் முன்நின்று நடத்தி இக்காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *