கேரளா:
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அதிகனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 3 கிராமங்கள் முழுவதும் அடியோடு அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்தது. மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 300&க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.நேற்று 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

இன்றுடன் 5 நாட்கள்
தொடர்ந்து மழை பெய்ததால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை நவீன எந்திரங்கள், மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆவதால் பல இடங்களில் துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. அந்த இடங்களில் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
பிணமாக மீட்கப்பட்டவர்களில் பலர் அடையாளம் காணம் முடியாத நிலையில் வைக்கப்பட்டு உள்ளத. இதனால் மாயமான உறவினர்களை தேடுபவர்களின் டி.என்.ஏ. மற்றும் இறந்தவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதித்து உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பினராயி விஜயன்
இந்த நிலையில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அந்த மாநில முதல்அமைச்சர் பினராயிவிஜயன் இன்று பார்வையிட்டார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நிலச்சரிவு விபத்தில் சிக்கியவர்களில் இன்னும் 206 பேர் காணவில்லை.காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தீயணைப்புப் படை, தேசிய பேரிடம் மீட்புப் படை, வனத் துறை, காவல் துறை, ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் என 1,419 பணியாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழுவினர், பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மனித மீட்பு ரேடார் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான ரேடார் போன்ற மேம்பட்ட கருவிகள் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பேரிடர் எச்சரிக்கை அமைப்பு
பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு பாதுகாப்பான பகுதி கண்டறியப்பட்டு அங்கு நகரமைப்பு உருவாக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில கல்வி அமைச்சர் பார்வையிட்டு, குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.
காலநிலை மாற்றத்தால் எழும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. கோட்டயத்தில் காலநிலை மாற்ற ஆய்வுகளுக்கான நிறுவனம் நிறுவப்பட உள்ளது. இந்நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வயநாட்டில் உள்ள முண்டகை மற்றும் சூரல்மாலா பகுதியில் உள்ள ஏஆர்டி 44 மற்றும் 46 ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.