மத்திய அரசின் நலத்திட்டங்கள் பெயரில்..!
ஆப் மற்றும் வலைதளத்தில் நன்கொடை வழங்கும் பக்கத்தில், ‘நன்கொடைக்கான காரணம்’ (Cause for Donation) என்ற தேர்வு உள்ளது. இதில் ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அதன்படி, `ஸ்வச் பாரத்’ (Swachh Bharath), `பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்’ (Beti Bachao Beti Padhao), `கிஷான் சேவா’ (Kishan Seva) ஆகிய, மத்திய அரசின் மூன்று நலத்திட்டங்கள் முதல் மூன்று ஆப்ஷன் களாகவும், கட்சி நிதிக்காக (Party Fund), மற்றும் பிற காரணத்துக்காக (Others) என்பவை நான்கு மற்றும் ஐந்தாவது ஆப்ஷன் களாகவும் கொடுக்கப்பட்டிருக்க, அதில் ஒன்றை நன்கொடை வழங்குபவர் தேர்ந் தெடுக்க வேண்டும்.
எழுந்தது சந்தேகம், விடை தேடக் கிளம்பிய சென்னை பத்திரிகையாளர்!
சென்னை, சத்தியம் டி.வியின் நியூஸ் எடிட்டர் பி.ஆர்.அரவிந்தக்ஷன், பா.ஜ.க-வின் ஆப் மற்றும் வலைதளத்தில், மத்திய அரசின் திட்டங்களுக்கு நன்கொடை பெறப் படுவதைப் பார்த்தபோது, அதிர்ச்சி யடைந்தார். கட்சிக்கான நன்கொடை பெறும் இடத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்களின் பெயரில் ஏன் நிதி வசூலிக்கப் படுகிறது? அரசு திட்டங்களின் பெயரில் நன்கொடை வசூலிக்க, அந்தத் திட்டங்களுக்கு உரிய துறைகளிடம் அதிகாரபூர்வ அனுமதி பெறப்பட்டதா? பா.ஜ.க-வால் திரட்டப்படும் அந்த நிதி, மத்திய அரசிடம் சேர்ப்பிக்கப் படுமா? அல்லது, பா.ஜ.க அலுவலகம் அதை அபகரித்துக் கொள்ளுமா? தனது சந்தேகங் களுக்கு விடை தேடிக் கிளம்பினார்.
100 ரூபாய் நன்கொடை, தொடர்ந்து ஆர்.டி.ஐ!
2022-ம் ஆண்டு, பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ், கிசான் சேவா, ஸ்வச் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ், ஒவ்வொன்றுக்கும் தலா 100 ரூபாய் நன்கொடையாக வழங்கினார், அரவிந்தக்ஷன். அதற்கு அவருக்கு அளிக்கப் பட்ட ஆன்லைன் ரசீதில், மத்திய அரசு அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத் தின் பெயர், முத்திரை எதுவும் இல்லை. மாறாக, பா.ஜ.க-வின் பெயரிலேயே ரசீது கொடுக்கப்பட்டிருந்தது. அது, அரவிந்தக் ஷனை தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் கேள்விகள் எழுப்பத் தூண்டியது. மேலே குறிப்பிட்ட மூன்று நலத்திட்டங்களும், மத்திய அரசின் எந்தெந்த அமைச்சகங்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றனவோ, அந்தந்த அமைச்சகங்களுக்கு, மத்திய அரசின் நலத் திட்டங்களின் பெயரால் பா.ஜ.க திரட்டி வரும் நன்கொடை பற்றி அறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை அனுப்பினார் அரவிந்தக்ஷன்.
அதன்படி, ஸ்வச் பாரத் (Swachh Bharath) திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையிடம் (Union Ministry of Jal Shakti’s Department of Drinking Water and Sanitation) ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியபோது, `SBM (G) Phase II-ன் வழிகாட்டுதலின்படி எந்த தனிநபரோ தொண்டு நிறுவனமோ ஸ்வச் பாரத் திட்டத்துக்காக நிதி திரட்ட எந்த விதியும் இல்லை’ என்று பதிலளித்தது.
தொடர்ந்து, பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் (Beti Bachao Beti Padhao) திட்டத்தைச் செயல்படுத்தி வரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் (The Union Ministry of Women and Child Development) ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியபோது, அதன் துணை இயக்குநர் ரஞ்சனா போலிமேரா, `இந்தத் திட்டத்துக்காக நமோ செயலி மூலம் நிதி திரட்ட சிறப்பு அனுமதி வழங்க எந்த விதியும் இல்லை’ என்று பதில் அளித்தார்.
மூன்றாவதாக, கிஷான் சேவா (Kishan Seva) திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை (Department of Agriculture, Cooperation and Farmers Welfare), முதலில் RTI கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்து விட்டது. அரவிந்தக்ஷன் விடாமல் மேல் முறையீடு செய்த பின், டிஜிட்டல் வேளாண் பிரிவு இயக்குநர் விஜய் ராஜ்மோகன், `அத்தகைய எந்த செயலியையும் எங்கள் துறை ஊக்கு விப்பதில்லை. விவசாயம் சார்ந்து எந்தச் செயலுக்கும் நிதி திரட்டுவதில்லை’ என்று பதில் அளித்தார்.