தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடைபெறுகிறது. அதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 11 நாட்கள் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடங்கியுள்ளது.
கண்காட்சியானது இன்று 7ம்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் பல்வேறு விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் முத்துலிருந்து பிறந்து வருவது போல தத்ரூபமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார் திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார் சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன் பிள்ளையார், ஏழரை அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்ற சொர்க்க வாசல் விநாயகர், ஸ்கூட்டர், சைக்கிள், கார், ரயில் ஓட்டும் விநாயகர், இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் சிலைகள் இடம் பெற்றுள்ளது. மேலும், நர்த்தன கணபதி, காசியானந்த கணபதி என பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டிருந்தன.
இவை அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த கண்காட்சியில் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் கோயில் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதனைத்தொடர்ந்து, 5 அடி உயர தங்க நிற யானையில், விநாயகர் சிவனுக்கு பூஜை செய்யும் சிலை, விநாயகர் அலங்கார சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், முருகன் மற்றும் பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர், வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.இந்த கண்காட்சி இன்று ஏழாம் தேதி முதல் துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கடந்த 18 ஆண்டுகளாக அவர்கள் சொந்த ஏற்பாட்டில் அவர்களது திருமண மண்டபத்தில் தொடர்ந்து விநாயகர் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து நானும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன்.
அர அடியிலிருந்து எட்டடி வரை பல்வேறு கோணங்களில் விநாயகரின் திருவுருவ சிலைகள் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. விநாயகர் நாதஸ்வரம் வாசிப்பது போலவும் விநாயகர் பொது மக்களுக்கு ஆசீர்வாதம் செய்வது போலவும் குளத்தில் விநாயகர் தானே படகை ஓட்டிச் செல்வது போலவும் இதுபோன்று பல்வேறு வகையில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி 3 மாடிகளில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 17ஆம் தேதி வரை மக்கள் பார்க்க கூடிய அளவிற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 21,000 விநாயகர்களை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல இதற்காக இரண்டு மாதங்களாக தொடர்ந்து உழைத்து மிகச் சிறப்பாக செய்திருக்கிறார், அவரை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துகிறேன். 18 வருடமாக தொடர்ந்து கண்காட்சியை நடத்தி வருகிறார். மேலும், அவர் தொடர்ச்சியாக இந்த கண்காட்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் கூறினார். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.