சென்னை,டிச.30-
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 1 என இந்திய அணி பின்தங்கி உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டு வெற்றிகளை பெற்று இருக்கிறது.
இதனிடையே நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது. அடுத்து ஒரு இடத்தை பிடிப்பதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தால் கூட இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்கலாம் என்ற நிலை இருந்தது.
அதே போல, இந்திய அணி நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தால் இலங்கை அணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதன் பின், இலங்கை அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும் அல்லது ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும்.
சிட்னியில் தான் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அங்கு போட்டியின் இடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எனவே, அந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது என்பதும் கடினமானதாகவே இருக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்திய அணியால் முன்னேற முடியுமா?
