டபுள் கேம் பிரேமலதா.. கடுப்பில் கட்சிகள்!
“ஜனவரி மாநாடு… கடலூர் மைதானம்… கூட்டணி அறிவிப்பு!” – கடந்த ஆறு மாதமாக கேப்டன் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட “பில்டப்’ இதுதான். மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அந்தப் பெட்டியைப் பத்திரப்படுத்தி, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு கடந்த 9-ம் தேதி கடலூரில் திரண்டார்கள் தொண்டர்கள். ஆனால், மேடை ஏறிய பிரேமலதா கொடுத்ததோ செம ஷாக்!
“சீட்டு என்கிட்டதான் இருக்கு… ஆளுங்கட்சிகளே இன்னும் வாயைத் திறக்காதப்போ நாங்க ஏன்பா அவசரப்படணும்?” என நிதானம் காட்ட, ஆடிப்போய்விட்டார்கள் தொண்டர்கள்.
இதையடுத்து ஒரு பக்கம் ‘உதய சூரியன்’, மறுபக்கம் ‘இரட்டை இலை’ என இரண்டு பக்கமும் பிரேமலதா தூது விடுகிறார் என்கிற விமர்சனம் கிளம்பியது. தே.ஜ கூட்டணியில் இழுக்க பியூஸ் கோயலும், அறிவாலயத்துக்கு அழைத்து வர அமைச்சர் ஏ.வேலுவும் மல்லுக்கட்டுகிறார்கள்.
பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த அந்த முதல் நாள் வரை பியூஸ் கோயல் தரப்பு ‘கோயம்பேடு’ கட்சியுடன் பேசி வந்தது. அங்கேயும் ஒரு முடிவும் எட்டப்படாததால், “அப்படியே யூ-டர்ன் போட்டு தி.மு.க-வுக்குத்தான் பிரேமலதா செல்வார்” எனப் பேச்சுக்கள் கிளம்பியது.