சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பொன்னை பாலு என்பவர் மீது ஏற்கெனவே 8 வழக்குகள் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (ஜூலை 5) மாலை, செம்பியம் (K-1) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெரு வீட்டின் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர் நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு, ரத்தக் காயமடைந்தவரை அங்கிருந்த நபர்களுடன் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து அவரது சகோதரர் வீரமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேற்படி கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) ஆஸ்ரா கர்க், தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காட்பாடியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை தாலுகாவைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த ராமு (எ) வினோத் (38), காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூரைச் சேர்ந்த அருள் (33) மற்றும் செல்வராஜ் (48) ஆகிய 8 நபர்களை இன்று (06.07.2024) கைது செய்தனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு மீது 8 வழக்குகளும், திருமலை மீது 7 வழக்குகளும், திருவேங்கடம் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேலும் திருமலை என்பவர் திரு.வி.க நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இதுவரையிலான விசாரணையின்படி, 8 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின்போது, ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த அவருடைய சகோதரர் வீரமணி மற்றும் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் டிரைவர் அப்துல்கனி ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது நிலைமை அங்கு கட்டுக்குள் உள்ளது. மேலும், முக்கியமான இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொலை வழக்கில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தக் கொலைக்கான காரணம், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, என்ன மாதிரியான ஆயுதங்கள், வாகனங்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை எல்லாம் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சரியான முறையில் விசாரித்து, நீதிமன்றத்தில் தண்டனைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது அரசியல் காரணங்களுக்கான கொலை இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகு, சில நேரங்களில் அவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. அரசியல் காரணங்கள் தாண்டி, குழு ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். அரசியல் காரணங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது,” என்றார் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.