தென் மாவட்டங்களில் தினகரன் வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன், அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர்.

தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன்.
பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.