தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிந்த போது தூத்துக்குடியில் தனது பணியை தொடர்ந்தார்.
முதல் நிலை காவலர், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர், பதவி உயர்வில் தற்போது 40 ஆண்டு கால அனுபவத்துடன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார்.

வரும் 30.06.2026 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (19.01.2026) உயிரிழந்தார்.
பின்னர், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிதம்பரநகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அரசு மரியாதை செய்யப்படவில்லை. இதற்கு வருத்தமும், கண்டனமும் தெரிவித்து தமிழக முதல்வருக்கு தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.