முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் சரண் அடைந்தது ஏன்? – தமிழக பாஜக கேள்வி

Thirumavalavan
Spread the love

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவன் இன்று இருநாவலவன் போல் மாற்றிப் பேசுவது நியாயமா? அநீதிக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து விட்டு, இறுதியில் ஆட்சி அதிகாரத்திடம் சரணடைவது திருமாவளவனுக்கு வழக்கமானதுதான்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, திட்டமிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தினோம். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் செயல்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

1278418.jpg

அவர் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் வைத்த கோரிக்கை தான் சிபிஐ விசாரணை. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, தமிழக அரசு விசாரிக்கக்கூடாது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது பாஜகவின் குரலாக இருந்தது,” என கூறியிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது நான்தான். அப்போது சிபிஐ விசாரணை வேண்டும் என நான் கோரவில்லை.

கொலை நடந்த சில மணி நேரங்களில் 8 பேர் சரணடைந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தவே சிபிஐ விசாரணை வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். பாஜக மட்டுமல்ல, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியும் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தினார். ஆம்ஸ்ட்ராங் எனது 34 ஆண்டுகால நெருங்கிய நண்பர். அதனால்தான் செய்தி கேள்விப்பட்டதும் பதறி துடித்து பேட்டி கொடுத்தேன்.

ஆனால், அதையும் திருமாவளவன் வேறு விதமாக திரிக்கிறார். சிபிஐ விசாரணை கோருவது சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சி என்றால், மாயாவதியும் சிபிஐ விசாரணை கேட்டதும் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியா? அதே மேடையில் மாயாவதி அவரின் கருத்தை வழிமொழிவது போல் பேசிவிட்டு இன்று திரித்து பேசுவது ஏன்? கடந்த மே 2-ம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். அப்போதும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை கோரின.

திருமாவளவன் கூற்றுப்படி அதுவும் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியா? ஜெயக்குமார் கொலையிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறாரா திருமாவளவன்? திமுக அரசைப் பொறுத்தவரை எந்தவொரு குற்றம் நடந்தாலும் அதை மூடி மறைக்கப் பார்க்கிறதே தவிர, குற்றம் செய்வதவர்களையும், அவர்களின் பின்னணியையும் தீர விசாரித்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில்லை.

திராவிட மாடல் ஆட்சியில், தமிழக காவல்துறையின் புலன் விசாரணை செயல் இழந்துள்ளது. ஒரு குற்றச் சம்பவம் நடக்கும்போது ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, பதற்றத்தை தணிக்க சிலரை சரணடைய வைத்து வாக்குமூலம் வாங்கி வழக்கை முடித்து விடுகிறார்கள். இந்த வாக்குமூலங்கள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படுவதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் பட்டியலின மக்களின் கொந்தளிப்பை அடக்க, காவல்துறை சிலரை சரணடைய வைத்துள்ளனர்.

அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பதை மாயாவதியே குறிப்பிட்டுள்ளார். எனவேதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரினார். பாஜக சார்பில் முக்கிய நிர்வாகிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி, தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளை சந்திக்க செய்தார்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் குழு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விவரித்தது. இதனால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தேசிய அளவில் அதி முக்கிய கவனம் பெற்றது.

இது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில்தான் விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். திருமாவளவனைப் பொருத்தவரை முதலில் அநீதிக்கு ஆதரவாக அதி தீவிரமாக குரல் கொடுப்பார். போராடுவார். ஆனால், இறுதியில் ஆட்சி அதிகாரத்திடம் சரணடைந்து விடுவார். பட்டியலின மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஆம்ஸ்ட்ராங், திருமாவளவன் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். ஆனால், அரசியலில் அவரைப் பின்பற்றவில்லை. ஆம்ஸ்ட்ராங் கடைசிவரை திராவிட கட்சிகளிடம் ஒரு நாளும் சமரசம் செய்து கொள்ளவில்லை. பட்டியலின மக்களின் மிகப்பெரிய எதிரி திராவிடம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஆனால், திருமாவளவன் திராவிடத்திடம் சரணடைந்து பதவிகளைப் பெற்றவர். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முதலில், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை விமர்சித்த திருமாவளவன், கடைசியில் முதல்வரிடமே சரணடைந்துள்ளார். இது அவருக்கு வழக்கமானதுதான். ஆம்ஸ்ட்ராங் போல திராவிடத்திடம், ஆட்சி அதிகாரத்திடம் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் திருமாவளவன் மிகப்பெரிய பட்டியலின தலைவராக உருவெடுத்திருப்பார்.

தமிழக முதல்வராக கூட வந்திருக்க முடியும். அவருடன் கூட்டணி வைக்க திமுக கெஞ்சும் நிலை வந்திருக்கும். ஆனால், திராவிடம் வீசிய வலையில் சிக்கி, அவர்களிடம் தேர்தலுக்கு தேர்தல் சில இடங்களை கெஞ்சிப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். திருமாவளவன் இன்று திடீரென்று முதல்வரிடம் சரணடைந்து இருநாவலவனாக மாற்றிப் பேசுவது அவருடைய மிகப்பெரிய வீழ்ச்சியின் உண்மையான அடையாளம். அரசியலை கடந்து, பதவி ஆசைகளை கடந்து பட்டியலின மக்களுக்காகவே உழைத்த இளம் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நீதி கிடைக்க, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய திருமாவளவன் குரல் கொடுக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது இருந்த அறச்சீற்றத்துடன் திருமாவளவன் போராட வேண்டும். ஆருத்ரா கோல்டு நிறுவனத்துடன் பாஜகவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் திருமாவளவன் கூறியிருக்கிறார். நடப்பது திமுக ஆட்சி. நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக காவல் துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பாஜகவினர் சம்மந்தப்பட்டிருந்தால் தாரளமாக நடவடிக்கை எடுக்கலாம் என, தமிழக பாஜக அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டார்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவின் சதித் திட்டங்களுக்கு திருமாவளன் உடன்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக காவல் துறை உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என திருமாவளவன் கூறியுள்ளதால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். எனவே, சிபிஐ விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *