விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய கிராமங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் திருவாமாத்தூர் கிராமத்தில் பேசியது: நீங்கள் ஏற்கெனவே திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கடந்த மக்களவைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில்போட்டியிட்ட புகழேந்தியை வெற்றிபெற வைத்தீர்கள். ஆட்சிக்கு வந்த திமுக பெட்ரோல், பால் விலையை குறைத்தது. விடியல் பயணம் திட்டத்தில் 8 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
புதுமைப்பெண் திட்டத்தில் இம்மாவட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதம் ரூ 1000 பெறுகின்றனர். மாவட்டத்தில் 66 ஆயிரம் மாணவர்கள் காலை உணவுத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இப்படிப்பட்ட திட்டங்களை பெற நீங்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும். நந்தன் கால்வாய் பணிகள் 25 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.