விடியோக்கள் வெளியிடப்படும் தளமான யூடியூப், இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு 50 நொடிகள் ஓடும் ஷார்ட்ஸ் விடியோக்களைத் தனது தளத்தில் அறிமுகப்படுத்தியது.
யூடியூப் தளம்
இந்த நிலையில் இந்தியாவில் ஷார்ட்ஸ் விடியோக்கள் செய்துள்ள சாதனைகள் குறித்துப் பேசிய யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், “இந்தியப் படைப்பாளிகள் உள்ளூர் விஷயங்களை காணொளிகளாக்கி உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். பயன்பாடு மற்றும் பார்வை நேரம் ஆகியவற்றில் இந்தியாவில் யூடியூப் தளம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷார்ட்ஸ் விடியோக்கள் தற்போது மிகப்பெரிய சாதனையாக 1 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்
மேலும், “இந்தியாவில் தொலைக்காட்சி இணைப்புகளில் அதிகம்பேரால் பார்க்கப்படும் தளமாக உள்ள யூடியூப், கடந்த 3 ஆண்டுகளில் 4 மடங்கு அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.யூடியூப் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் தங்களுக்கென வணிகம் சார்ந்த குழு, எழுத்தாளர் குழு மற்றும் காணொளி தயாரிப்பு குழுக்களைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றனர். இதன் மூலம், பொழுதுபோக்கு, செய்தி மற்றும் கல்வியை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும், அவர்கள் யூடியூப் தளத்தின் வளர்ச்சியையும் முன்னெடுக்கின்றனர்” என்று கூறினார்.