அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – திமுக ரியாக்‌ஷன் என்ன? | DMK criticizes Enforcement Directorate raid at Minister KN Nehru related places

1357296.jpg
Spread the love

சென்னை: “அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை என்பது, 2013-ல் நடைபெற்ற நிகழ்வுக்காக 2021-ம் ஆண்டு சிபிஐயினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமேயன்றி, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல” என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக, திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்றைய தினம் அமலாக்கத் துறையினுடைய அதிகாரி சோதனையின்போது அளித்த விவரங்களின்படி 2013-ம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021-ல் ஒரு வழக்கு பதிந்து அதன் பிறகு ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் இருந்து ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத் துறை இந்த சோதனை நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அரசு அலுவலகங்களிலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீதும் தொடங்கப்படும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எப்போது எடுக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட நீட் தேர்வு சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழகத்தில், தமிழக முதல்வரின் ஒருங்கிணைப்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இருமொழிக் கொள்கைதான் எங்களுடைய கொள்கை மும்மொழிப் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று தமிழகம் கூறியது. தமிழக முதல்வர் அதை வலியுறுத்தி கூறினார். பிறகு வக்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயன்றபோது தமிழக மக்களின் உணர்வாக அதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

இதற்கு எல்லாம் சரியான பதில் இல்லாமல், அரசியலமைப்பின் படி திமுகவும், தமிழக முதல்வரும் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை எதிர் கொள்ள இயலாமல் திமுக தலைவர்கள் மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் காலம் கடந்த சட்டத்தை மீறிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.

ஊடகங்களில் அமைச்சர் பெயரையும் அவருடைய மகன், குடும்பத்தினுடைய பெயரையும் சொல்லி ஏதோ ஒரு ஊழல் குற்றம் போல சித்தரிக்க முயல்கிறார்கள். அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையின் போது குறைந்தப் பட்சமாக தெரிவித்த தகவல்களின்படி அந்த வழக்கு 2013-ல் நடைபெற்ற நிகழ்வுக்காக 2021-ம் ஆண்டு சிபிஐயினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமேயன்றி, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல.

எப்பொழுதெல்லாம் தமிழகத்துக்காக குரல் கொடுக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிறாமோ, எப்பொழுதெல்லாம் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள். மக்கள் நிச்சயம் இதனை நிராகரிப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *