இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த 37 வயதாகும் இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை கோரி வழக்கு | Case filed seeking Indian citizenship for 37 year old daughter of Sri Lankan couple

1356439.jpg
Spread the love

சென்னை: இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பழனிவேல் என்பவரது மகன் சரவணமுத்து, இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக சரவணமுத்துவும், அவரது மனைவி தமிழ்செல்வியும் அகதிகளாக கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின்னர், வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் வசித்தனர். கடந்த 1987-ம் ஆண்டு அவர்களுக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. ரம்யாவுக்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் சான்றிதழ் என அனைத்து சான்றிதழ்களும் கோவையில் பெறப்பட்டு, பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்து கோவையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் முடித்த ரம்யாவுக்கு ருத்ரன் (9) என்ற மகன் உள்ளார். ருத்ரனுக்கும் கோவையில் முறைப்படி பிறப்புச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ரம்யா கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ரம்யாவின் பெற்றோர் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான பதிவை புதுப்பிக்க மறுத்த அதிகாரிகள், ரம்யாவும் இலங்கைக்கு சென்று, பின்னர் முறைப்படி இந்திய விசா மூலமாக இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், ரம்யா பெற்றுள்ள இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்தும், இந்தியாவில் பிறந்த தனக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரம்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.இளமுகில் ஆஜராகி, ‘‘இந்தியாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை பெற தகுதியுண்டு. எனவே பிறப்பின் அடிப்படையில் வழங்க மறுத்தாலும் திருமணத்தின் அடிப்படையிலும், மனுதாரரின் தாத்தா, பாட்டி இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’’ என வாதிட்டார். மத்திய அரசு தரப்பில், ‘‘கடந்த 1987 ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே அந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி கோர முடியும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர் இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்தவர் மட்டுமல்ல, 9 வயது இந்திய குழந்தையின் தாயாரும்கூட. தமிழகத்திலேயே 37 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இலங்கைக்கு சென்று ஆவணங்களை பெற்று வரும்படி அதிகாரிகள் கூறுவது அர்த்தமற்றது. எனவே, மனுதாரர் இந்திய குடியுரிமை கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை சட்ட ரீதியாக பரிசீலித்து மத்திய அரசு தகுந்த முடிவு எடுக்க வேண்டும். அதுவரை மனுதாரரையும், அவரது பெற்றோரையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கூடாது’’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *