இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் ஆர்வம் அதிகரிப்பு: தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 47% பங்களிப்பு | tn contributes 47 percent in leather goods exports economic survery

1349264.jpg
Spread the love

சென்னை: இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 47 சதவீதமாக உள்ளதாகவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால் 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கை, காலணிகள் உற்பத்தி தொழில் வளர்ச்சி, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய தோல் பொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வரும் சூழலில், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழகம், சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38 சதவீத பங்களிப்பும் இந்தியாவின் மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47 சதவீத பங்களிப்பை தமிழகம் வழங்கியுள்ளது. தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீப ஆண்டுகளில் முதலீடுகள் செய்வதற்காக பெரிய காலணி உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கும், கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்கவும் தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகளையும் ஆய்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான வேலைவாய்ப்பை வளர்த்துள்ளது என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசின் இத்தகைய முயற்சிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதையும், குறிப்பாக சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான நைக் நிறுவனம் தைவான் நாட்டு ஃபெங் தே நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ள மேற்கொண்டுள்ள முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத் தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலை மானியங்கள் போன்றவற்றை தமிழக அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இல்லம் தேடிக் கல்வி: தமிழகத்தின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை ஒரு புதுமையான முயற்சியாக ஆய்வறிக்கை விவரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியைக் குறைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறை மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பறைகளில் பங்கேற்பதாகவும், மாணவர்கள் கணிதம் மற்றும் மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டிப்பது மகிழ்ச்சிதரத்தக்க செய்தியாகும்.

மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை: மொத்தத்தில் மத்திய அரசின் பொருளாதார மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை தமிழ்த்தின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை குறித்துக் கூறியுள்ள விவரங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிர்வாக மேன்மையில் இந்திய அளவில் தமிழக அரசு படைத்து வரும் சாதனைகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *