சென்னை: சென்னை வானகரம் பகுதியில் புதிய காவல் நிலையம் உதயமாகியுள்ளது. இதை வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் பர்வேஷ்குமார் திறந்து வைத்தார்.
மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் அடர்த்திக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக காவல் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை பெருநகர காவலில் புதிதாக வானகரம் காவல் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து வானகரம், திருவேற்காடு, போரூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை பெருநகர காவலில் வானகரம் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்காவல் நிலையம் வானகரம், நூம்பல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்காவல் நிலைய கட்டிடத்தை காவல் ஆணையர் அருண் மேற்பார்வையில் வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் பர்வேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார்.
இக்காவல் நிலையத்துக்கு காவல் ஆய்வாளர் மகேஷ்வரி உட்பட, ஓர் உதவி ஆய்வாளர், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், 4 தலைமைக் காவலர்கள், 7 முதல்நிலைக் காவலர்கள், 10 இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 24 போலீஸார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் இக்காவல் நிலையத்தை 044-23452102 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிழக்கில் மதுரவாயல் பாலம்- சர்வீஸ் சாலை, மேற்கில் பூந்தமல்லி சாலை- வானகரம் சந்திப்பு, வடக்கில் திருவேற்காடு- அம்பத்தூர் சாலை, தெற்கில் எஸ்ஆர்எம்சி- போரூர் சாலை உள்ளடக்கிய பகுதி பொதுமக்கள் இக்காவல் நிலையத்தால் பயன்பெறலாம்.
புதிய காவல் நிலைய திறப்பு நிகழ்ச்சியில் சென்னை காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் பி.சி.கல்யாண், கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் அதிவீர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.