கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: கேப்டனாக எம்.எஸ்.தோனி வேறு மாதிரி… இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
மோசமான ஆட்டம், 104 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். டெவான் கான்வே 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன் பின், களமிறங்கிய வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இன்றையப் போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே! சேப்பாக்கத்தில் சாதனைகள் என்ன?
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.