தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய பாஜக தலைவரை தேர்வு செய்யும் பணிகளை கட்சித் தலைமை மேற்கொண்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் நாளை (ஏப். 11) விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பாஜக அறிவித்துள்ளது.
அதில், பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக தலைவராவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
மேலும், போட்டியில் தான் இல்லை என்று அண்ணாமலை கூறிவிட்டார். அண்மையில், பிரதமா் மோடியின் ராமேசுவர நிகழ்விலும் நாகேந்திரன் முக்கியத்துவம் பெற்ற நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்துவிடுவார் என்று நம்பியிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னைக்கு இன்று வருகை தருகிறார். அதிமுகவுடன் குறித்த பேச்சுவார்த்தைக்கா அல்லது பாஜக தலைவர் குறித்த தேர்தலுக்கா என்பது குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமி தமிழக பாஜக தலைவராக ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 2024 மக்களவைத் தேர்தலின்போது, இவர் பாஜகவுக்காக தென்மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.