‘திமுக கூட்டணிக் கட்சிகள் உஷார்’ – சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேச்சு | Edappadi Palaniswami has urged DMK alliance parties to be alert

1357394.jpg
Spread the love

சென்னை: ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்றும், திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கைகளை நிராகரித்து தொடர்ந்து எங்களை பேசுவதற்கு அனுமதிக்காமல், வேறு கட்சி தலைவர்கள் மட்டுமே பேச அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இதையொட்டியே சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்தோம்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கு பிறகு, கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வரப்பட்டு பேசப்படும் போதும், அது நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 1-ம் தேதி அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் காவிரி குண்டார் பிரச்சினை குறித்து நீர்வளத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

ஆனால் அது நேரலையில் வரவில்லை. அதேபோல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் 26-ம் தேதி திருச்செந்தூர் – ராமேஸ்வரம் திருக்கோயில் கூட்டத்தில் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதுவும் நேரலை செய்யப்படவில்லை.

அதே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது அதை நேரலை செய்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சி (அதிமுக) எம்எல்ஏக்கள் கேள்வி கேட்கும் போது, கேள்விகளை நேரலை செய்யாமல் அமைச்சர் மற்றும் முதல்வரின் பதிலை மட்டுமே நேரலை செய்கின்றனர். கேள்வியே தெரியாமல் பதிலை மட்டும் நேரலை செய்தால் அது எப்படி மக்களுக்கு புரியும். இதை தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு பேரவைத் தலைவர் எதற்காக ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார்?

அதேபோல் நேற்று டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதிக்க மறுத்து அதிமுகவை வெளியேற்றிய பின்னர், எங்களை முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதை அனுமதித்து நேரலையில் ஒலிபரப்பு செய்கின்றனர். அதே மக்கள் பிரச்சினையை பேசும் அதிமுக எம்எல்ஏக்கள் பேச்சினை நேரலையில் ஒலிபரப்பு செய்வதில்லை. அதை அவை குறிப்பிலும் பதிவு செய்வது கிடையாது. இது எந்த வகையில் நியாயம்? இது சர்வாதிகார போக்காகும். சட்டப்பேரவை தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார்.

முதல்வருக்கு தில், திராணி, தெம்பு இருந்தால் சட்டப்பேரவையிலே எங்களை பேச வாய்ப்பளித்து, அதற்குரிய பதிலை அவையில் பதிவு செய்தால் அதை நாங்கள் வரவேற்போம். அதைவிடுத்து கோழைத்தனமாக எங்களை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, கடுமையான விமர்சனங்களை பதிவு செய்வது என்பது எந்த விதத்தில் நியாயம்? அதேபோல் எங்களது உரிமையை பறிக்கும் போது ஜனநாயக ரீதியாக கண்டித்து வெளிநடப்பு செய்கின்றோம். அதை கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.

இதே திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, வெளிநடப்பு செய்த காலங்களில் நாங்கள் கிண்டல் செய்தோமா? நாங்கள் மதித்தோம். அகங்காரத்துடன் இருக்கின்றனர். இந்த வரிசையில் இருந்து எதிர் வரிசைக்கு செல்வதற்கு நீண்ட காலமில்லை. இன்னும் 9 மாதகாலம் மட்டுமே இந்த ஆட்சி. அதன் பின் எதிர்க்கட்சியாக கூட திமுக வராது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் விட்டார். அதே ஆளுங்கட்சியாக வந்த பிறகு அதே பிரதமருக்கு வெண்கொடை பிடித்தார். அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின் வெண்குடை (வெள்ளைக் குடை) வேந்தராவார். இவர் வீரத்தை பற்றி பேசலாமா? எங்களை பொறுத்தவரை வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம்.

திமுகவை போல கூட்டணி கட்சிகளை அடிமையாக வைத்திருக்கும் கட்சி அதிமுக அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும். அப்போது தான் அந்தந்த கட்சிகள் வளரும். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. எல்லோரும் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டனர். காலப்போக்கில் இந்த கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்து போகும். எனவே திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *