“தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்!” – கோவை திமுக மேயரை மிரட்டும் கூட்டணிக் கட்சிகள் | Alliance parties threatening dmk Mayor in coimbatore

1352893.jpg
Spread the love

திமுக-வுக்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று இப்போது உள்ளாட்சி அளவில் கூட்டணிக் கட்சிகளும் ஆங்காங்கே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு உதாரணம், அண்மையில் கோவை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியது.

கோவை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் வழக்கம் போல் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் சர்வே செய்து சொத்து வரி விதிப்பதை தடைசெய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், கொமதேக கட்சியின் கவுன்சிலர்களும் இதே கோரிக்கைகளுக்காக மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

இதுகுறித்து பேசிய கோவை மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியின் அழகு ஜெயபாலன், “100 சதவீதம் சொத்துவரி உயர்வு, ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்துவரி உயர்வு இதையெல்லாம் தீர்மான நிலையிலேயே நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.

அதையும் மீறி அந்த தீர்மானங்களை நிறைவேற்றி விட்டனர். ஆனால், இதையெல்லாம் அமல்படுத்தினால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவர்கள்; அரசுக்குத்தான் கெட்ட பெயர் வரும். இதேபோல், ட்ரோன் மூலம் கட்டிடங்களை சர்வே செய்து அதனடிப்படையில் இஷ்டத்துக்கு வரி நிர்ணயித்தனர். வரி செலுத்த தாமதமானால் 1 சதவீதம் அபராதம் விதித்தார்கள். இதை எல்லாம் ஏற்கவே முடியாது என்று சொல்லித்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

20-ம் தேதி ஆய்வுக்கு வந்த அமைச்சர் நேரு, ட்ரோன் சர்வே மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால், 100 சதவீத வரி உயர்வை 50 சதவீதமாக குறைத்தல், ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கிறது. இவை நிறைவேற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடமும் பேசி வருகிறோம். தொடர் போராட்டத்தை நடத்தினால் தான் எங்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படும் என்றால் அதையும் கையில் எடுக்க தயங்கமாட்டோம்” என்றார். மேயர் ரங்கநாயகியிடம் இந்தப் பிரச்சினை குறித்து பேசினோம். “ட்ரோன் சர்வேயை நிறுத்திவிட்டோம்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உரிய காலத்தில் சொத்து வரியை உயர்த்தாமல் விட்டதால் இப்போது ஒரே சமயத்தில் 100 சதவீதம் வரியை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வு என்பது குறைவான தொகையே. கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் இக்கோரிக்கைகள் தொடர்பாக என்னிடமோ, பொறுப்பு அமைச்சரிடமோ பேசியிருக்கலாம்.

அல்லது தங்களது கட்சி தலைவர்கள் மூலமாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். அதை விடுத்து, கூட்டணியில் இருந்து கொண்டு மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது எங்களுக்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. அதை நாங்கள் வன்மையாக கண்டித்தும் விட்டோம்” என்றார் அவர்.

மூன்றாண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்ற கேள்வியை எழுப்பும் சிலர், “பொங்கல் சமயத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அமைச்சரிடமிருந்து ‘பொங்கல் பரிசு’ வந்தது. இது லேட்டாகத்தான் மற்றவர்களுக்கு தெரிய வந்தது. கூட்டணிக் கட்சியினர் திடீரென போர்க்குரல் உயர்த்தி இருப்பதற்கு இந்த ‘பரிசு’ விவகாரமும் முக்கிய காரணம்” என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *