எம்புரான் படத்தின் மீது வலதுசாரி அமைப்புகள் கண்டனங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பத்திரிகை ஒன்று அந்தப் படத்தின் இயக்குநர் பிருத்விராஜை விமர்சித்து எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், “பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக உள்ளார். இது எப்போது தெரிய வந்ததென்றால், தீவுகளை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதனை வகுப்புவாத வெளிச்சத்தில் சித்தரிக்கும் விதமாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். மேலும், சமூக வலைதளங்களிலும் சிஏஏ போராட்டத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டார்.
எம்புரான் படம் ஆரம்பிக்கையில் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை என்று குறிப்பிட்டனர். ஆனால், பின்வந்த காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது” என குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.