பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழகம், இன்றைக்கு வீறுநடை போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது. எந்தப் பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை. எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை; எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பரவலான, சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை; சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை; பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை. அத்தனையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை. மக்களின் பேராதரவோடு, கருத்தியல் களத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம். திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழகத்தை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது. ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழகத்தின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய அளவில் தொடர்ந்து மின்னிடும். ‘எழில் திராவிடம் எழுக!’ என்னும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் எழுச்சி எந்நாளும் தொடர, தமிழகம் எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம். விவசாயிகளின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து அரசு துணை நிற்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற அதிமுக ஆட்சிக் காலங்களில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்ததை பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பொங்கல் திருநாளை தமிழினத்தின் பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்நாளில் அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இருள் அகன்று, மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். தை கொடுக்காததை தரணி கொடுக்காது என்பதே உண்மை. அதற்காக உழைக்க இந்த தைத்திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்களாகிய நாம் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: உழைப்பின் அறுவடைத் திருநாளான பொங்கல் விழா மட்டுமல்ல; உண்மையான தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமும் ஆகும். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி தழைத்தோங்கும் தமிழர்தம் புத்தாக்கமாகவும் இவ்வாண்டு அமையட்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் அரசியல் சட்டத்தை அகற்றி விட்டு பிறப்பால் பேதம் கற்பிக்கும் மனு அதர்மம் உள்ளிட்டவற்றை அரசியல் சட்டமாக மாற்ற மத்திய பாஜக கூட்டணி முயல்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. பிறந்திருக்கும் தை அனைத்துப் பகுதி மக்களின் நல்வாழ்வுக்கான வழிகளை திறந்துவிடும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தமிழக மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என வாழ்த்துகிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ‘உலகத்தாருக்கே அச்சாணி’ என வள்ளுவரால் வருணிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் சூழ்ந்த எண்ணற்ற இன்னல்களில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி பூமியில் அடியோடு முறியடிப்போம்.
விசிக தலைவர் திருமாவளவன்: தன்மானத்தையும், தலை நிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைவருக்கும் இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்பட தை பிறக்கும் பொங்கல் திருநாளானது வழிகாட்டட்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்துக்கே உணவளிக்கும் உன்னத பணியை இடைவிடாது மேற்கொண்டிருக்கும் விவசாயிகளை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் என பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறேன்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: உழைப்பின் மதிப்பை உணர்ந்து வெற்றியை நோக்கி அனைவரும் முன்னேற வேண்டும். இந்நன்னாளில் ஒவ்வொரு வீட்டிலும் ஆனந்தம் தழைத்து, வளமையும் நலமும் பெருகட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் எம்.பி.,-க்கள் ஆர்.சரத்குமார், சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளனர்.