வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் பழைய கௌகுவால் பகுதியில் கடந்த பிப்.14 அன்று நடத்தப்பட்ட சோதனையில் குக்கி நேஷனல் ஆர்மி எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.15) கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஹுயிகாப் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் காங்லெய்பாக் கம்யூனிஸ் கட்சி எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ மரணம்!
முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) மற்றும் குக்கி நேஷனல் ஆர்மி உள்பட 24 கிளர்ச்சிக் குழுக்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசு ஆகியவற்றுக்கு இடையே செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூர் அரசு அந்த ஒப்பந்ததிலிருந்து விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.