மதுரை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு கைவிட கூறியதா? – அமைச்சர் மறுப்பு | TN govt abandon the Madurai-Thoothukudi new broad gauge railway project? – Minister Sivasankar denies

1346670.jpg
Spread the love

சென்னை: “மதுரை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழக அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழக அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான தகவலை ரயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா?” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே அமைச்சர் 10-ம் தேதி அன்று மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசு கோரியதாகவும், அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழக அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

மதுரை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு செய்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழக அரசு அரசாணைகளை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழக முதல்வர், மத்திய ரயில்வே அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு மத்திய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா?

இத்திட்டத்துக்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024, மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை. அந்தக் கடித விவரங்களாவது மத்திய ரயில்வே துறை அமைச்சருக்குத் தெரியுமா?

மேலும், 12.12.2024 நாளிட்ட அரசுக் கடிதம் மூலம் தென்னக ரயில்வே, பொது மேலாளரிடம் தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கையை கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தென்னக ரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது கடித நாள் 19.12.2024ல் “மதுரை – தூத்துக்குடி அகல ரயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான் – மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது” என்றும் “மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக ரயில்வேயால் இக்கருத்துரு குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தினை கைவிடக்கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழக அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழக அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதாக அடிப்படை ஆதாரமற்றது என்பது மட்டுமல்ல. தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான தகவலை மத்திய ரயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா?

தமிழகத்தின் திட்டம் என்றாலே ஒரவஞ்சனையுடன் பார்த்து, புறக்கணிக்கும் மனப்பான்மையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் எண்ணவோட்டம் தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? ஆகவே முதல்வரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்துக்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *