மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக பொன்முடி நியமனம்: மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சிப் பதவி | Ponmudi, Saminathan appointed as DMK Deputy General Secretaries

Spread the love

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக சார்பில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்த சாமிநாதன், துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இல.பத்மநாபன் வகித்து வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பு கே. ஈஸ்வரசாமிக்கு வழங்கப்படுகிறது. வேலூர் தொகுதியை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து வேலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏ.பி. நந்தகுமார் எம்எல்ஏ, காட்பாடி, கீழ்வைத்தியணான்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய வேலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்முடியிடமிருந்து துணைப் பொதுச் செயலர் பதவி சில மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *