கொல்கத்தா: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் ஆங்காங்கே கலவரமும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், மூர்ஷிதாபாத் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திங்கள்கிழமை(ஏப். 14) பொதுவெளியில் பேசியிருப்பதாவது: “நாம் ஒருமுறைதான் வாழ்ந்து உயிரிழக்கிறோம். அப்படியிருக்கும்போது, கலவரம் எதற்கு? ஒவ்வொரு சாதிக்கும் மதத்துக்கும் போராடுவதற்கான உரிமை உள்ளது. ஆனால், அதற்காக சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு சிலர் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு கவனம் செலுத்தாதீர்கள்” என்றார்.