‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | CM Stalin explains about the ‘ரூ’ issue in UngalilOruvan video

1354546.jpg
Spread the love

சென்னை: “மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ (Ungalil Oruvan) என்னும் பெயரில், திமுக அரசின் மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 16) வெளியான உங்களில் ஒருவன் பதில்கள் காணொலியில், “மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

அந்த வீடியோவில் முதல்வர் கூறியிருப்பதாவது: பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக்கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை அதில் ‘ரூ’-என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.

ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்களை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்கிறார்.

அவங்களே, பல பதிவுகளில் ரூ-என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவங்களுக்கு, இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

அதேபோல், பட்ஜெட் முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு, “முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், ழான் திரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்கள். மறுபுறம், அடித்தட்டு மக்களிடமும் அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் மக்களிடம் நல்ல ‘ரீச்’ ஆன திட்டங்கள் என்ன என்று பார்த்து, அதை நம்முடைய மாநிலத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக, பல நாட்கள் தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு பத்து மணி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் கூட உட்கார்ந்து பேசிப் பேசித்தான் இந்த பட்ஜெட்டைத் தயாரித்தோம்.” என்று முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை அரசே இலவசமாகத் தரும், ஊர்க்காவல் படையில் திருநங்கைகளையும் ஈடுபடுத்துவோம் போன்ற அறிவிப்பு மனதுக்கு நெருக்கமான பட்ஜெட் அறிவிப்புகள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *