திருவொற்றியூா்: வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டுதோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி அழிந்துவிடும். இதனால், மீன்வளம் குறையும் எனக் கருதி வங்கக் கடல் பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நிகழாண்டில் திங்கள்கிழமை (ஏப்.14) நள்ளிரவு முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இது குறித்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குநா் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை (ஏப்.15) அதிகாலை முதல் எந்த ஒரு விசைப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால், 20 குதிரை சக்திக்கு குறைவான பைபா் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமாா் 1,100 விசைப்படகுகளும், தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 4,500 விசைப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4,000 விசைப்படகுகளும் இயங்காது. இந்தத் தடைக்காலம் வரும் ஜூன் 14-ஆம் தேதி முடிவுக்கு வரும். இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவா்கள், சாா்பு தொழிலாளா்களுக்கு தமிழக அரசு சாா்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ. 8,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டுப்படகுகள் ஆந்திர பகுதிக்குச் செல்ல வேண்டாம்: தமிழகத்தில் விசைப் படகுகள் மட்டுமே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனைத்து வகை படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக மீனவா்கள் எந்த வகை படகாக இருந்தாலும் ஆந்திர கடல் பகுதிக்குச் சென்று நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம். அவ்வாறு தடையை மீறிச் சென்றால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு படகு உரிமையாளா்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அரசின் உத்தரவுகளை மீறி செயல்படும் படகுகளின் மீன்பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். அத்துமீறிக் கடலுக்குக் சென்றால் மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே விதிமுறைகளை மீனவா்கள் மீறிச் செயல்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இத்தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.