சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதையும் படிக்க: பயிற்சியை ஒருபோதும் தவறவிடமாட்டார்; சுனில் நரைனுக்கு குயிண்டன் டி காக் பாராட்டு!
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி, 246 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரபசிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். பஞ்சாப் அணி 66 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் (13 பந்துகளில்) ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், பிரபசிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். பிரபசிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சிஎஸ்கே: முன்னாள் ஆஸி. கேப்டன்
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் வீசிய முகமது ஷமி விக்கெட் ஏதும் எடுக்காமல் 75 ரன்களை வாரி வழங்கினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈசன் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.