ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட பிரதமர் மோடியின் வீடியோ; மன்னிப்பு கேட்டு விளக்கமளித்த மெட்டா!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. இன்று அதிகாலையில், காக்ரோச் ஜனதா கட்சியின் மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் முதல் நேரடி உரையாடலான ஜெனரேஷன் இசட் வீடியோ ஃபேஸ்புக்கில் கிடைக்கவில்லை. இது குறித்து சர்ச்சை வெடித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வீடியோ மீண்டும் வெளியானபோதும் ஏன் பிரதமரின் வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகத் தளங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதிக்க, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, மெட்டா (Meta), கூகுள் (Google), எக்ஸ் (X), ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் பிற முன்னணி டிஜிட்டல் தளங்களின் பிரதிநிதிகளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு அழைத்துள்ளது.

இக்கூட்டத்தில் குறிப்பாக, பிரதமரின் ஃபேஸ்புக் காணொளியில் ஏன் தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது, வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் ஏன் எப்போதும் உடனடியாக நீக்கப்படுவதில்லை, மற்றும் சட்ட அமலாக்க ஏஜென்சிகள் கோரும் வரை ஏன் இழிவான காணொளிகள் பெரும்பாலும் இணையத்தில் தொடர்ந்து நீடிக்கின்றன ஆகியவை குறித்து விளக்கம் கேட்கப்பட இருக்கிறது.

சமூக ஊடகத் தளங்களுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த தனது பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்க இக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தவறுதலாக, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துவிட்டதாக மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. திட்டமிட்டு அகற்றப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *