ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர். அதேவேளையில் நாட்டில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் துண்டாடப்பட்டுள்ளன.
உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக யானைகள் இடம்பெயர முடியாமல் திணறி வருகின்றன. சில தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் யானைகளின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

மனித தவறுகளால் யானைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. கூடலூர் வனக்கோட்டத்தில் யானை – மனித எதிர்கொள்ளல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள அகழிகளையே இரண்டு யானைகள் வழித்தடமாக பயன்படுத்தி வரும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.