ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் என்று சொல்லப்படும் எஃப்&ஓ வர்த்தகம் படுரிஸ்க்-ஆனது. மிக மிக ஜாக்கிரதையாக, ஸ்டாப் லாஸ் போட்டு செய்தால் மட்டுமே பெரிதாக லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் வராமல் தப்பிக்கலாம். கொஞ்சம் அசால்ட்டாக இருந்தாலும் படுபயங்கரமான நஷ்டம் வந்துவிடும். அப்படிப்பட்ட ஓர் அனுபவம் தனக்கு நேர்ந்ததாக சமீபத்தில் எக்ஸ் வலைதளத்தில் எஃப்&ஓ வர்த்தகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வர்த்தகரின் பெயர் மயங்க் ராஜ். எஃப்&ஓ வர்த்தகத்தில் டிரேட் செய்வதுதான் இவரது பிரதான வேலை போலத் தெரிகிறது. எஃப்&ஓ வர்த்தகம் என்பது ஏறக்குறைய சூதாட்டம் போன்றதுதான். அதாவது, பங்குச் சந்தை என்பது உலகப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இதில் முதலீடு செய்வது குறுகிய காலத்தில் நஷ்டத்தைத் தர வாய்ப்பு கொண்டதாக இருந்தாலும் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட அதிக லாபம் தரக்கூடியது.
ஆனால், எஃப்&ஓ வர்த்தகம் என்பது முதலீடு அல்ல. இன்று வாங்கி நாளை விற்கக்கூடிய டிரேடிங் சமாச்சாரம். இது குறுகிய காலத்துக்கு மட்டுமே செய்யக்கூடியது. இதில் வாங்கி விற்று லாபம் பார்ப்பது ஒரு வகை என்றால், விற்று வாங்கி லாபம் பார்ப்பது இன்னொரு வகை. இந்த இரண்டிலுமே அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

எக்ஸ் தளத்தில் தன் அனுபவத்தைப் பகிர்ந்த மயங்க் ராஜ், அக்டோபர் 13-ஆம் தேதி காலாவதி ஆகக்கூடிய நிஃப்டி 22000 கால் ஆப்ஷனைக் கடந்த 8-ஆம் தேதி வாங்கி இருக்கிறார். இதை வாங்கியவர் 10 – 20 லட்சம் ரூபாய் நஷ்டம் வந்தால் விற்றுவிட்டு வெளியேறிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால், 9-ஆம் தேதி அன்று காலை மயங்க் ராஜ் அசந்து படுத்துவிட்டார். இதனால் கொஞ்சம் காலதாமதமாக எழுந்து, கால் ஆப்ஷன் என்ன ஆகியிருக்கிறது என்று பார்ப்பதற்குள் அது 71 லட்சம் ரூபாய் நஷ்டம் என்கிற அளவுக்கு படுபயங்கரமாக மாறியிருந்தது. வேறு வழியில்லாமல் நஷ்டத்தைக் கட்டிவிட்டு, அந்த டிரேடில் இருந்து வெளியே வந்திருக்கிறார் மயங்க்.
”அசந்து படுத்துவிட்டதன் காரணமாக மிகப் பெரிய நஷ்டத்தை நான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இனிமேலும் நான் கொஞ்சம் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்த நஷ்டம் எனக்கு உணர்த்துகிறது” என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டு, தனது பிராபிட் அண்ட் லாஸ் கணக்கையும் பகிர்ந்துள்ளார். பிற்பாடு நிஃப்டி 22500 கால் ஆப்ஷனை வாங்கி, 10 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து, மொத்த நஷ்டத்தை 61 லட்சம் ரூபாயாகக் குறைத்ததாகவும் சொல்லி இருக்கிறார்.

இதைப் படித்த பல நெட்டிசன்கள் ”இந்த எஃப்&ஒ வர்த்தகம் படுடேஞ்ஜரானது. இன்று வாங்கி/விற்று நாளை விற்பது/வாங்குவது (Buy Today, Sell Tomorrow -vBTST) கூடவே கூடாது என்று சொல்வது அதில் மிகப் பெரிய அளவில் நஷ்டம் வந்துவிடும் என்பதற்காகத்தான்” என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்கள்.
இன்னும் சிலர், ”இவர் உண்மையைத்தான் சொல்கிறாரா, இல்லை, இந்த நஷ்டம் எல்லாம் எனக்கு சகஜமப்பா என்று சொல்லி, டிரேடர்களின் கவனத்தை ஈர்க்கிறாரா? எஃப்&ஓ-வில் இப்படித் தினமும் டிரேடிங் செய்கிறேன் என்று சொன்னால், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் உடனே படிப்பார்கள். இவர் பெரிய டிரேடர் போல இருக்கிறார் என்று நினைத்து இவரைத் தேடி வருவார்கள். அவர்களுக்கு அதை சொல்லித் தருகிறேன் என்கிற வழியில் இவர் பணம் சம்பாதிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என்றும் சிலர் எச்சரித்திருக்கிறார்கள்.

இன்றைக்கும் எஃப்&ஓ டிரேடிங்கில் கோடி கோடியாக லாபத்தை அள்ளிவிடலாம் என பலரும் யூடியூபில் வீடியோக்களைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பல லட்சம் பேரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எஃப்&ஓ வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்கிறார்களோ, இல்லையோ, யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் நன்கு லாபம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சாதாரண மக்கள் இது மாதிரியான யூடிபர்களைப் பார்த்து, எஃப்&ஓ-வில் பணம் போட்டு, படுநஷ்டத்தை அடைவதைவிட, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வதுதான் சரியான, புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்! காரணம், இந்த எஃப்&ஓ வர்த்தகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிரேடர்கள் நஷ்டம் அடைந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செபி.
எனவே, அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் இருந்தால், அதிக நஷ்டத்துக்கும் நாம் ஆளாக மாட்டோம். பேராசைப்பட்டால், பெரு நஷ்டத்தையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். எஃப்&ஓ டிரேடிங்கில் ஈடுபடுபவர்களும் ஈடுபட நினைப்பவர்களும் சர்வ ஜாக்கிரதையாக இருப்பது மிக மிக நல்லது!

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் – 89259 44568
சபரிநாதன் – 89259 44569
தங்கலட்சுமி – 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!