அசாம்: குத்தகைக்கு விட்ட ஹோட்டலைத் திரும்பக் கொடுக்க மறுப்பு; உரிமையாளர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

Spread the love

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் என்ற ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர் ஹெலனா பராலி என்பவரிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவிற்கும், குத்தகைக்கு எடுத்த கோகாயிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இது தொடர்பாக பேசுவதற்காக நேற்று இரவு ஹெலனா தனது குடும்பத்தினருடன் ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஹோட்டலில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மோதல் வெடித்தது.

இதனால் கோகாய் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாறியாகச் சுட ஆரம்பித்தார். இதில் ஹோட்டல் பிலாஸ் இன் உரிமையாளர் ஹெலனா பராலி, அவரது சகோதரர் புதேவ் பராலி, மகன் தேவர்ஷி காஷ்யப், மருமகள் ரினிகி காஷ்யப், அவர்களது கார் ஓட்டுநர் நாராயண் தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.

அந்த ஹோட்டலின் பராமரிப்பாளரான சத்யேந்திர பதக் இத்துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார்.

இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய கோகாயைக் கைது செய்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கவுகாத்தி போலீஸ் கமிஷனர் டாக்டர் பார்த்த சாரதி மஹந்தா கூறுகையில், ”இரவு 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்து உயிர் பிழைத்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹோட்டல் குத்தகை தொடர்பான பிரச்னையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்து இருப்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றார்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் அவர்களது கிராமத்தைச் சேர்ந்தவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *