விஜய் சேதுபதியின் “பத்தா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் சாய் பிரித்விராஜ் என்கிற சிறுவன் நடித்திருக்கிறார்.
பதற்றமும் பயமும் கலந்த முகத்துடனேயே படம் முழுக்க வந்து, மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், “எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. சினிமாவுக்கு வரணும்ங்கிற ஆசையே என் அக்கா மூலமாதான் வந்துச்சு. அதனால அவளுக்குத்தான் நான் ஃபர்ஸ்ட் நன்றி சொல்லணும்.
என்னுடைய முதல் படத்துக்கே இவ்வளவு நல்ல கமெண்ட்ஸ் வர்றதைப் பார்க்கும்போது உண்மையிலேயே எனக்கு அளவற்ற மகிழ்ச்சியா இருக்கு. முதல்முறை நடிக்கும்போது எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்தது.
ஆனா, அவளுக்குக் கிடைக்காத பாராட்டு எனக்குக் கிடைச்சிருக்குன்னு அக்கா ரொம்பவே சந்தோஷப்படுறா. என் அக்கா கயலை ‘இன்ஃபினிட்டி அவுட் ஆஃப் 100 ‘ அளவுக்குப் பிடிக்கும்” என்றவர், “இப்போ தியேட்டருக்குப் போனா எல்லாரும் ‘சபரி பயலுங்கடா’னு கத்துறாங்க.
அதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஜாலியா இருக்கு. கென் கருணாஸ் அண்ணா, ‘யூத்’ படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகள், கருணாஸ் அங்கிள், கிரேஸ் ஆண்டி, கமல் சார் வரைக்கும் நிறைய பேர் எனக்கு மெசேஜ் பண்ணிப் பாராட்டினாங்க. கென் அண்ணா எனக்கொரு வாட்சும் வாங்கித் தந்தார். கமல் சாரும் எங்க டீமைப் பாராட்டியிருந்தார்.