2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத முடிவாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக Vs அதிமுக கான்சப்டையே அடித்து துவம்சம் செய்தது தவெக. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாருமே அசைக்க முடியாத சக்திகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளையும் ஒரே அணியில் அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, திமுக அமைச்சரவையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் தோல்வி, கோட்டையான சென்னையை இழந்தது என அடிக்கு மேல் அடி வாங்கியது திமுக. இருந்து ஏதோ சமாளித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. ஆனால், மறுபக்கம் அதிமுகவோ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக, எடப்பாடிக்கு எதிராக எம்எல்ஏக்களை ஒன்றிணைத்து கலகம் செய்து அது வொர்க் அவுட் ஆகாத நிலையில் மீண்டும் அவரிடமே சரண்டர் ஆனார் வேலுமணி. இருப்பினும் அவரது செயலை அ.தி.மு.க. தொண்டர்கள் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் தயாராக இல்லை. அதற்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் இரங்கல் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி நோக்கி அதிமுக தொண்டர் ஒருவர் துரோகி என கத்தியதே அதற்கு சாட்சி.
கொங்கு மண்ணிலேயே ‘துரோகி’ என அவரை விமர்சிக்கும் அளவுக்கு சொந்தக் கட்சியினர் கொந்தளிப்பாக உள்ளதால், எடப்பாடி தலைமையிலேயே நீடிப்பதா என அவர் யோசிக்க தொடங்கியிருக்கிறாராம்.
இந்நிலையில்தான் அண்ணாமலையிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த ஆஃபரை உடனடியாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கொஞ்ச நாள் அதிமுகவிலேயே இருந்து நிலைமையை சரி செய்ய முயற்சிக்கப் போவதாகவும், ஒருவேளை நிலைமை கைமீறிச் சென்றால் அண்ணாமலை குறித்து யோசிக்கலாம் என்றும் வேலுமணி முடிவெடுத்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

