அதிமுக MLAக்கள் ‘குதிரைப் பேரம்’ சர்ச்சை: அரசிடம் விளக்கம் கேட்க தயாராகும் ஆளுநர்? | Exclusive | Is the governor of tamilnadu is planning to get the explanation from tn government in MLA trading complaint

Spread the love

சமீபத்தில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக அரசியல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநரின் செயல்பாடுகளில் மாற்றம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிப்பதிலும், அரசிடம் விளக்கங்கள் கோருவதிலும் ஆளுநர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் 167 என்ன சொல்கிறது?

இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து சட்ட நிபுணர்களும் விவாதித்து வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167வது பிரிவின்படி, மாநில நிர்வாகம் தொடர்பான எந்த விவகாரத்தையும் குறித்து ஆளுநர் தகவல் கோரினால், முதலமைச்சர் அல்லது அரசு அதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, கட்சி மாறுதல், அரசியல் பேரம் குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கோருவதற்கு சட்டரீதியான வாய்ப்பு இருப்பதாக சில சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இடைத்தேர்தலுக்கு முன் அரசியல் அழுத்தமா?

ஆறு தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பெரிதாக்கி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.

மறுபுறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அடுத்த கட்டம் என்ன?

எதிர்க்கட்சிகளின் மனுக்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகளை ஆய்வு செய்த பிறகு, தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலகல் விவகாரம் வெறும் அரசியல் குற்றச்சாட்டைத் தாண்டி, ஆளுநர் – அரசு மோதலாக மாறும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், வரும் நாட்களில் மேலும் முக்கியத்துவம் பெறக்கூடும் என்பதால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சட்ட மற்றும் நிர்வாக வட்டாரங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *