அதிமுக TO தவெகவுக்குத் தாவிய 6 எம்.எல்.ஏ.க்கள்… அதிரடித் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்! – Kumudam

Spread the love

கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் – மரகரம் குமரவேல், தாராபுரம் – சத்தியபாமா, அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா, பெருந்துறை – ஜெயக்குமார், கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை – சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவை உள்ளது.

இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

சபாநாயகர் தரப்பில், ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும்.

சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும் தான் விசாரிக்கமுடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல். எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானவை; சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை.

நேரில் சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும் என வாதிடப்பட்டது.

சட்டப்பேரவை செயலாளர் தரப்பில், உண்மையாக, சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியே; தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் ராஜினாமா ஏற்க தடையில்லை; ராஜினாமா ஏற்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியானது என உத்தரவிட்டுள்ளனர். மேலும், தகுதி நீக்க நடவடிக்கை குறித்த முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்களில் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *