தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ் , “கடந்த ஆட்சியில் இந்தியா முழுவதும் மதுவை தடை செய்தால்தான் தமிழகத்திலும் தடை செய்ய முடியும் என்றனர். நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்” என்று கூறினார்.
தவிர, “எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகங்களுக்கே தெரியவில்லை. மதுவை நீங்கள் எப்படி குறைக்கப் போகிறீர்கள்? ஆண்டுக்கு இத்தனை கடைகளை மூடலாம் என எதுவும் திட்டம் இருக்கிறதா?
நேரு பிரதமராக இருந்த போது மதுக்கடைகளை மூட எல்லா மாநிலத்துக்கும் ஒரு கமிட்டியை அனுப்பினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் “கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது’ என்றனர். அதை இங்கே பதிவு செய்கிறேன். அமைச்சர் விக்னேஷ் சிறு வயதாக இருந்தாலும் நன்றாகப் பேசுகிறார். ஆனால், போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்” என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசினார்.

“டாஸ்மாக்கில் என்னென்ன ஊழல் நடந்தது… யார் யாருக்கு ‘Party Fund’ சென்றது என விரிவாக அறிக்கை தயார் செய்து அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது. ஆனால், அப்போதைய அரசு அதை வைத்து வழக்குப் பதிவு செய்யவில்லை” என்று அமைச்சர் அருண்ராஜ் கூற எதிர்க்கட்சியினர் லாட்டரி… லாட்டரி என கோஷமிட்டனர்.
உடனே, “லாட்டரி கம்பெனியிடம் நீங்கள் ஏன் 900 கோடி ரூபாய் வாங்கினீர்கள்?” என்று ஆதவ் கேட்க, “900 கோடி ரூபாய் கொடுத்தது ஆதவ்வின் மாமாதான். நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்” என்று உதயநிதி பதில் அளித்தார்.
அதற்கு, “அதை உங்க அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் தான் பணம் வாங்கியிருக்கிறார். உங்கள் அப்பாவை இங்கு காணவில்லை” என்று ஆதவ் கூற, தவெக-வினர் கைதட்டினர். எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.