“அந்த மற்றும் பலர் வீட்டுல 3 மணி நேரம் இருந்தது மறந்துபோச்சா? ” விஜய்யை விளாசிய EPS! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பானுமதியை ஆதரித்து, தளவாய்பட்டினத்தில் நேற்று (அக்.2) எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

தவெக சார்பில் தாராபுரத்தில் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் செப் 30 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டபோது அதிமுகவை மற்றும் பலர்,மற்றும் பலர் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்று (அக்.2) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பானுமதியை ஆதரித்து, தளவாய்பட்டினத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி விஜய்யை விமர்சித்துப் பேசியதாவது, “தவெக தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால், அதிமுகவை ‘மற்றும் பலர்’ என்று விஜய் குறிப்பிடுகிறார். இந்த ‘மற்றும் பலர்’ என்பது இப்போது நினைவுக்கு வந்ததா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “நான் முதலமைச்சராக இருந்தபோது விஜய் எனது வீட்டிற்கு வந்து மூன்று மணி நேரம் காத்திருந்தார். அப்போது தனது படத்தின் வெளியீடு தொடர்பான பிரச்னையை என்னிடம் கூறினார். மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்க வேண்டியிருந்ததால், அடுத்த நாளே படம் வெளியாக இருந்த நிலையில் பதற்றத்துடன் இருந்தார்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது அதிகாரிகள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகத்தில் இல்லை என்றும், “நீங்கள் செல்லுங்கள், நான் செய்து கொடுக்கிறேன்” என தான் கூறியபோதும், பிரச்னை தீர்ந்த பிறகே செல்வதாக விஜய் தெரிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

“அன்று நடந்ததை நான் இதுவரை வெளியில் சொல்லவில்லை. இப்போது ‘மற்றும் பலர்’ என அதிமுகவை விமர்சிக்கிறார். அன்று என் வீட்டில் மூன்று மணி நேரம் காத்திருந்தது அவருக்கு நினைவில் இல்லையா? அந்த நன்றி உணர்வு எங்கே?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தவெக வேட்பாளர் சத்யபாமாவின் பிரசாரத்தையும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “தவெக வேட்பாளர் சத்யபாமா அழுகிறார். அவரது நடிப்பில் விஜய்யே தோற்றுவிட்டார்” என விமர்சனம் செய்தார்.

தாராபுரம் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், “ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. உயிரிழந்தால் பொதுவாக இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால், இந்தத் தேர்தல் குதிரை பேரத்தால் வந்த தேர்தல்” என குற்றம்சாட்டினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து வேறு கட்சியில் இணையச் செய்து தற்போது தேர்தலில் போட்டியிட வைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார். “எம்.எல்.ஏ.வை திருடியவர்களை என்ன சொல்வார்கள்? ஆடு திருடியவர்களை ஆடு திருடன் என்றும், மாடு திருடியவர்களை மாடு திருடன் என்றும் சொல்வார்கள். எம்.எல்.ஏ.வை திருடியவர்களை என்ன சொல்வது?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மேலும், “இந்த இடைத்தேர்தலில் துரோகத்துக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்” என அதிமுக தொண்டர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார்.

விஜய்யின் பிரசாரத்தையும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “விஜய் இரண்டு நிமிடம் வந்து பேசினாலே வெற்றி பெற்றுவிடுவோம் என்று ஆரம்பத்தில் கூறினார்கள். ஆனால், இப்போது அவர் பிரசாரம் செய்துவிட்ட நிலையிலும் கிராமம் கிராமமாகவும், தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும் சென்றாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, “உங்களது நடிப்பை திரைப்படங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்” என விஜய்யை விமர்சித்த அவர், கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் மக்களைச் சந்திக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “நிர்வாகத் திறனற்ற அரசாக உள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *