கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை முன்னதாக, தனக்கு ஜாமின் வழங்கக் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த வழக்கறிஞர்கள் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால் அவரின் மீது கைது நடவடிக்கை பாய்ந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சண்முகபிரியா வீட்டில் அதிரடி சோதனை
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் சண்முகபிரியாவின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்து பேர் கொண்ட போலீஸ் குழுவினர் காலை முதல் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சண்முகபிரியா, ஆடைகள் மொத்த விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், ‘Aphrodite Drapes’ என்ற பெயரில் துணிக்கடையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பெருங்குடி மற்றும் நீலாங்கரை பகுதிகளில் அவருக்குச் சொந்தமான வீடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்?
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் உமாசங்கர் என்ற ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகவே சண்முகபிரியா குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. பள்ளி நிர்வாகங்களிடம் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முத்துக்குமாருடன் சண்முகபிரியாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், அதன் மூலமாக அன்பில் மகேஷுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பணம் கைமாறிய வழிகள் தொடர்பாக போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையில் சண்முகபிரியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீடுகளில் ஏற்கெனவே சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றின் அடிப்படையில் அவரிடம் நேரடி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வளையத்தில் தொழிலதிபர்
அன்பில் மகேஷ் மீதான லஞ்சப் புகார் தொடர்பாகப் பணப் பரிமாற்றங்கள் குறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சண்முகபிரியாவின் வீட்டில் நடைபெறும் சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அவருக்குள்ள தொடர்பு என்ன, பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அவரது பங்கு என்ன என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தெளிவாகத் தெரியவரும்.
தற்போது நடைபெற்று வரும் சோதனை நிறைவுற்றுள்ளது. காவல்துறையின் விசாரணையின் பல முக்கிய ஆவணங்கள் கிடைப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

